சைவமும் வாழ்வியல் நெறியும் (கட்டுரை) | BEST ARTICAL | 2021

சைவமும் வாழ்வியல் நெறியும்

 “சைவமும், வாழ்வியல் நெறியும்”

4

உலகிலுள்ள எல்லாசமயங்களுக்கும் தாய் சமயமாகும், மூத்த சமயமாகவும், விளங்குவது சைவ சமயமாகும். இத்தகைய சிறப்புமிகு சமயத்தில் பிறந்தவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள் என நாவலர் பெருமான் விளம்புகின்றார். சைவ சமயமானது சிவத்துடன் சம்பந்தமானது. சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுஞ் சமயமானது. சிவபெருமானின் இயல்பு எவ்விதமோ! அவ்விதமே சைவமும். இவ்வுண்மைநிலையை திருமந்திரத்தில் வருமாறு,

சைவம் சிவனுடன் சம்பந்த மாருதல்

சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்

சைவம் சிவன் தன்னைச் சாராமல் நீங்குதல்

சைவம் சிவானந்தம் சாயுச்சியமே 

                                                                    (திருமந்திரம்)

என திருமூலநாயனார் திடமாக குறிப்பிட்டுள்ளார். சைவத்தில் அன்பு என்ற சாதனத்தினூடாக சிவமாகிய இறைப்பரம் பொருளின் அருட்கடாச்சத்தை பெற்று ஆன்மலாபமாகிய முத்தியின்பத்தை துய்யலாம் என்ற உபாயத்தினை சைவ அனுபூதி செல்வர்களாகிய அருளாளர்களின் வாழ்வியலினூடாக அறியலாம்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே கையில் வளமிருக்க, வளம் தேடி அலைந்த கதையாக எம்மவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான நெறியை பின்பற்றாது தவிக்கின்றார்கள். பிறந்த நாள் தொடக்கம் இறக்கும் காலம் வரை இன்பமும், துன்பமும் மாறி மாறி எம்மை வாட்டுகின்றது. வாழும் காலம் மிகக்குறுகியது அக்காலத்தில் நாம் உண்மைப்பொருளாகிய இறைத்தன்மையை உணராமல் பொய்மையிலே காலத்தை செலுத்தி மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் உறுகின்றோம். இதனையே மணிவாசகர்,

‘பொய்மையை பெருக்கி பொழுதினை 

 சுருக்கும் புமுத்தலைப் புலையனேன்’ எனவும், வள்ளுவப் பெருமான்,

‘பொருளல்லாவற்றை பொருள் என்று

 உணரும் மருள்’                         (திருக்குறள்)

என்று குறிப்பட்டுள்ளார்கள். இதனூடாக நாம் அறிவது யாதெனில், நாம் வாழ்வியல் பேற்றை பெற்ற போதும் அப்பேற்றை உரியவாறு பேணாமல் பிறவிப் பெருந்துன்ப கடலிலேயே தத்தளித்துக் கொண்டு கரை சேரமுடியாது திழைக்கின்ற ஈனமான வாழ்வியலை வாழ்கின்ற நிலையில் உள்ளோம்,

‘பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே

தொழிலாகி இருக்கிpன்றாரே’

என பிறப்பானது மீண்டும் மீண்டும் ஈடேற்றமடையாமல் தொழிலாகவே போயிற்று என அப்பர் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வத்தின் நிலையை பெறலாம் என்ற வள்ளுவத்தின் வாக்கிற்கமைய பிறவிகளில் சிறந்த பிறவியாகிய மனிதப்பிறவியை ஆன்மீகத்தின் வழி இயக்கினால் இறையின்பமாகிய தேனை இடைவிடாது சுவைக்கலாம், என்பது திண்ணம். இறைவன் படைத்த அங்கங்களை நாம் இறையின் பால் செலுத்தினால் நிலையற்ற தன்மை மருவி பேரின்ப பெருவாழ்வு வரும் என அப்பர் சுவாமிகள் திருவங்க மாலையில் குறிப்பிட்டு எம்மை அதன்வழி ஆற்றுப்படுத்தியுள்ளார்.

எம்முடைய அவயங்கள் அனைத்தும் மெய்பொருளின் பால் ஈர்க்கப்படல் வேண்டும் அவன் அளித்த வாழ்வை அவனுக்காகவே வாழ பழக வேண்டும். இதனையே நாவலர் பெருமகனார்,

‘ இற்த சரீரம் எமக்கு கிடைத்தது

 இறைவனுக்கு தொண்டு செய்து

 முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்’

என்கிறார். மணிவாசகரும் ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்கிறார். எமக்கு கிடைத்த சரீரம் அழியக் கூடியது இது நிலையற்றது என்பதை அறியாது உள்ளோம். எமது வினையின் காரணமாக இந்த தூல சரீரமாகிய அழியக்கூடிய சரீரத்தை எமக்களித்துள்ளான் இந்த புவியில் நாம் வாழும் காலத்தில் பக்குவப்படுவரை எமக்கு முத்தி கிடைக்காது.

வாழுகின்ற காலத்தில் தன்னுரை போல பிறவுயிர்களையும் பேண வேண்டும் ஆனால் நாம் சுயநலத்தையே பெரிதும் பேணுகின்றோம். பள்ளியிலே கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளான் என்ற செய்தியை படித்துவிட்டு படித்ததை பரீட்சை வினாத்தாளில் மட்டும் பதிவுச் செய்து விட்டு வாழ்க்கையில் பின்பற்றாது வாழுகின்றோம்.

‘கற்க கசடற கற்றவை கற்றபின்

 நிற்க அதற்கு தக’

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கமைய முறையாக கற்க வேண்டும், கற்றதை ஒழுக பழக வேண்டும், கற்றதன் பயன் கற்றதை பின்பற்றுதலே ஆகும். அவ்விதம் வாழ்ந்தவர்களே வாழ்விலே உயர்நிலை எய்தியவர்களாவர்.

‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ – பராபரக்கண்ணி –

என தாயுமான சுவாமிகளும் கூறுகின்றார். எங்களுடைய சமயம் எல்லாக் கோணங்களிலும் நாம் வாழும் நெறியை போதிக்கின்றது. ஆனால் நம்மவர்கள் சமயம் போதிக்கும் ஞானநூல்களை படிப்பது இல்லை என்ற நிலையுள்ளது. இந்நிலை என்றொருனாள் மாறுமோ அன்று எம்முடைய வாழ்க்கை நெறி உண்மைநிலை எய்தும்.

மண்ணில் நல்லவண்ணம் வாழ எமக்கு எவ்விதத்தடையும் இல்லை அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பு அடையும். அப்பருடைய வாழ்வியலை எடுத்து நோக்கினால் அவர் மெய்சமயம் நுளைந்து 81 வயதுவரை வாழ்ந்து இறையின்பத்தை எய்தினார். சமயக்குரவர்களுள் இவர் மட்டுமே கூடிய காலம் இவ்வுலகிலே வாழ்ந்து இறைத்தொண்டு புரிந்தவராவார். இவ்வாறாக சமயத்தின் உண்மை நிலையை உணர்ந்து இறைவன் ஒருவனே உண்மை என வாழ்ந்து முத்தியடைந்நவர்கள் வழி நாமும் ஒழுக வேண்டும்.

‘மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர்

சாலப் பெரியர்என் றுந்தீபற

தவத்தில் தலைவர் என்றுந் தீபற’ – திருவுந்தியார் –

மேற்படி திருவுந்தியாரில், மறைப்பை ஒழிக்க மானிடப்பிறவியை கொடுத்து ஞானத்தை உணர ஞான குருவாக இறைவன் வருவான் என்ற செய்தியை திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் உட்கிடையாக உணர்த்தியுள்ளார். நாம் வாழும் காலத்தில் சைவம் கூறும் வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி சைவ சாதனங்களின் வழி ஒழுகி அக, புற பூசைகளை செய்து எம்மை பொய்மையில் செல்ல வைக்கும் கள்ளபுலனங்களாகிய ஐம்புலனங்களை அடக்கும் உபாயத்தினை அறிந்து வாழ சைவசமயத்தின் உட்கிடக்கைகையை கூறும் நூல்களை ஆராய்ந்து படிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இடைவிடாது அவன்பால் சித்தத்தை வைத்து வாழ்க்கையை செம்மைப் படுத்தி வாழ்வீராக.

‘சைவசொற்பொழிவாளர்’  

‘சைவசொற்கோளரி’

‘சிவநெறிச்செம்மல்’ 

மாத்தளையூர் சைவப்புலவர்.

இரா.ஜீவன் பிரசான்

Master Degree
Follow us on Facebook

Other Exam Papers Download

01. GCE A/L General English Past Papers | In English Medium Click here to Download

02. Grade 5 scholarship exam Excellent English Click here to Download

03. Grade – 5 IQ Model Paper Click Here to Download